ஏழு புலம்பெயர் அமைப்புக்களுக்கு அரசாங்கம் தடை

ஏழு புலம்பெயர் அமைப்புக்களுக்கு அரசாங்கம் மீண்டும் தடை

by Staff Writer 29-03-2021 | 6:50 PM
கடந்த அரசாங்கத்தினால் 2016 ஆம் ஆண்டும் நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதி புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள்மீதான தடையை தளர்த்தும் வகையில் விடுக்கப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானியில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் மூலம் இந்த தடை அமுலுக்கு வந்துள்ளது. மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ள அமைப்புக்கள் மற்றும் தனி நபர்களின் பெயர் விபரங்கள் 2216/37 அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்றகாலப் பகுதியில் 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி 25 ஆம் திகதி இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். இதற்கமைய பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழர் பேரவை, அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் ஆகியன திருத்தப்பட்ட பட்டியலில் மீள இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் உலகத் தமிழர் பேரவை, கனேடிய தமிழர் தேசிய அவை, தமிழ் இளைஞர் அமைப்பு அவுஸ்திரேலியா, உலக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆகிய அமைப்புக்களும் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதனைத் தவிர இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வசித்துவரும் 388 பேரும் தடை செய்யப்பட்டோர் பட்டியலில் மீளவும் இணைக்கப்பட்டுள்ளனர். 1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபை சட்டத்தின் பிரகாரம் அரசாங்கம் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு சார்பில் அதன் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன இந்த அதிவிசேட வர்த்தமானியை வௌியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஏனைய செய்திகள்