by Staff Writer 29-03-2021 | 5:55 PM
ஏப்ரல் 21 மிலேச்சத்தனமான தீவிரவாத தாக்குதலை நடத்திய மற்றும் அதற்கு உதவிய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துமாறு கொழும்பு உயர் மறைமாவட்ட, உயிர்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கான நியாயம் கோரும் குழு வலியுறுத்தியுள்ளது.
இந்த கடமையை நிறைவேற்றாதிருப்பது ஒரு குற்றச் செயலாகும் என்பதே தமது கருத்து என குறித்த குழு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொழும்பு பேராயர், மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் மெக்ஸ்வெல் ஜி சில்வா ஆண்டகை, அருட்பணி சிசில் ஜோய் பெரேரா, அருட்பணி கெமிலஸ் பெர்னாண்டோ, அருட்பணி சாந்த சாகர ஹெட்டிஆரச்சி, அருட்பணி லோரன்ஸ் ராமநாயக்க, அருட்பணி டெனின்டன் சுபசிங்க ஆகியோரின் கையொப்பங்களுடன் இந்த அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிறைவேற்றும் பொறுப்பை உரிய அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் நிறைவேற்றாமல் இருக்க முடியாத நிலையை உருவாக்க செயற்படுதல் அனைத்து பிரஜைகளினதும் பொறுப்பு என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் சுயாதீனமாக செயற்படுத்தப்படுவதை சீர்குலைக்க எந்தவொரு அரசியல் தலையீடும் செய்ய வேண்டாம் என அரசாங்கத்திடமும் எதிர்க்கட்சியிடமும் அனைத்து அரசியல்வாதிகளிடமும் உயிர்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கான நியாயம் கோரும் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக பாகுபாடின்றி , தயங்காமல் துரிதமாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அந்த குழு கேட்டுள்ளது.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இஸ்லாமிய தீவிரவாத குழுக்களை முழுமையாக தடை செய்து அவர்களுடன் தொடர்புடைய வௌிநாட்டு அனுசரணையாளர்கள் மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் உள்நாட்டவர்கள் ஆகியவர்களை அடையாளம் கண்டு, அவர்களை இந்த நாட்டிலிருந்து நாடு கடத்துமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சிலரால் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாக கூறப்படும் ஆயுதங்களை கைப்பற்றுமாறும், தீவிரவாதத்திற்கு ஊக்கமளித்த பணம் மற்றும் அசையும், அசையா சொத்துக்களை அரசய உடமைகளாக்குமாறும் தாம் கோருவதாக கொழும்பு உயர் மறைமாவட்ட குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கைகளை, உயிர்த தாக்குதல் நடாத்தப்பட்டு இரண்டு வருடங்கள் நிறைவடைகின்ற எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் செயற்படுத்துமாறும் அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் தண்டனையை செயற்படுத்துவதற்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளையாவது மேற்கொள்ளுமாறு தாம் வலியுறுத்துவதாக கொழும்பு உயர் மறைமாவட்டம் தெரிவித்துள்ளது.
நாட்டில் இடம்பெறும் ஏனைய குற்றங்கள் தொடர்பாக குற்றவியல் விசாரணை திணைக்களம் மற்றும் ஏனைய உளவுத் துறை தேடுதல்களை நடாத்தி துரிதமாக குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை தேடிச் செல்லும் நிலை காணப்படுகிறது என இவர்கள் கூறியுள்ளனர்.
எனினும், 269 பேரை ஈவிரக்கமின்றி கொலை செய்து, 300 க்கும் மேற்பட்டோரை ஊனமுற்றவர்களாகவும், நிரந்தரமாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டியவர்களாகவும் ஆக்கி, பாரிய அழிவை உண்டாக்கியவர்களை கண்டுபிடிப்பதற்கும், அவர்களுக்கு எதிரான நடவடிக்கையை எடுக்க இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இதுவரை இயலாமை போயுள்ளமை புதிராக உள்ளதென கொழும்பு உயர் மறை மாவட்டம் அறிவித்துள்ளது.
இதனால், ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் செயற்படும் நிறுவனங்களுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக என்ற அச்சம் எழுவதாகவும் கொழும்பு உயர் மறை மாவட்ட பேச்சாளர்கள் குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உண்மையை வௌிக்ெகாணர்வதற்காக தங்களால் மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகளை வலிமைவாய்ந்ததாக நாடு முழுவதும் விரிவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு உயர் மறைமாவட்ட உயிர்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கான நியாயம் கோரும் குழு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.