by Staff Writer 28-03-2021 | 10:01 PM
Colombo (News 1st) மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (29) மீள திறக்கப்படவுள்ளன.
கடந்த 15 ஆம் திகதி மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளின் தரம் 05, 11 மற்றும் 13 ஆகிய வகுப்புகள் கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டன.
இதனிடையே, மேல் மாகாணத்தில் பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளரினால் விசேட சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
நாளைய தினம் (29) பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைக்கும் போது, குழுக்களாக பிரித்து கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதனூடாக கொரோனா தடுப்பு தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள ஒழுங்கு விதிகளை பின்பற்றுதல் வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.
அதற்கமைய, ஒரு வகுப்பில் 15 மாணவர்கள் மாத்திரமே இருக்க முடியும் என கல்வி அமைச்சின் செயலாளரால் விடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்படுமாயின், அந்த பகுதிக்குரிய பாடசாலைக்கு மாத்திரம் குறித்த காலப்பகுதிக்கு விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளரால் விடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேல் மாகாணத்திலுள்ள அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளையும் எதிர்வரும் 05 ஆம் திகதி திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.