Colombo (News 1st) எகிப்தின் சூயஸ் கால்வாயின் குறுக்கே தரைதட்டி நிற்கும் மிகப்பெரிய சரக்கு கப்பலை மீண்டும் மிதக்க வைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.
எனினும், இந்த முயற்சிகளில் சிறிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ள சூயஸ் கால்வாய் அதிகாரிகள், உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை அந்தக் கப்பலை மீண்டும் மிதக்க வைப்பதற்கான வாய்ப்பிருப்பதாகக் கூறியுள்ளனர்.
சரக்கு போக்குவரத்து பாதைகளில் உலகின் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும் சூயஸ் கால்வாயில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் எவர் கிவன் (Ever Given) என்ற மிகப்பெரிய சரக்குக் கப்பல் தரைதட்டி நிற்கிறது.
எவர் கிவன் கப்பலின் இரண்டு பக்கங்களிலும் 300-க்கும் மேற்பட்ட கப்பல்கள் காத்திருக்கின்றன. இதனால் உலகளவில் சரக்குப் போக்குவரத்து கணிசமாகத் தடைபட்டுள்ளது.
சில சரக்கு கப்பல்கள் ஆப்பிரிக்க கண்டத்தின் தெற்கே உள்ள நன்னம்பிக்கை முனையை சுற்றி தங்களது பயணத்தை தொடர்ந்து வருகின்றன.
சனிக்கிழமை மட்டும் சுமார் 20,000 தொன் மணல் எவர் கிவன் கப்பலை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
அந்த கப்பலை மீண்டும் மிதக்க வைப்பதற்காக 14 இழுவைப்படகுகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் அந்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.
வலுவான அலைகள் மற்றும் வேகமான காற்று காரணமாக கப்பலை மீண்டும் மிதக்க வைக்கும் முயற்சிகள் முழுவதும் வெற்றி பெறவில்லை. எனினும், இழுவைப் படகுகள் மூலம் இழுத்தும் தள்ளியும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால் ஏற்கனவே தரைதட்டி நின்ற கோணத்திலிருந்து தற்போது 30 டிகிரி கோணத்தில் திரும்பி நிற்கிறது எவர் கிவன் கப்பல்.
இந்த வெற்றி சிறியது என்றாலும் இதை இழுவைப் படகுகளில் இருக்கும் ஊழியர்கள், அவற்றின் ஹாரன்கள் மூலம் ஒலி எழுப்பிக் கொண்டாடும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவர் ஜெனரல் ஒசாமா ரேபி, கப்பலுக்கு அடியில் நீர் பாயத் தொடங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
எவர் கிவன் கப்பல் எந்த நேரம் வேண்டுமானாலும் நகர்ந்து மீண்டும் மிதக்கத் தொடங்கலாம் என்றும் சனிக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
சுமார் 2,20,000 தொன் மொத்த எடையுள்ள அந்தக் கப்பலில் தற்போது 18,300 மிகப்பெரிய சரக்கு பெட்டகங்கள் உள்ளன.
கப்பலின் ஒட்டுமொத்த எடையைக் குறைப்பதற்காக இந்த பெட்டகங்களை இறக்க வேண்டிய தேவை ஏற்படாது என்று தாம் நம்புவதாகவும் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை இழுவைப் படகுகள் மற்றும் தூர் வாரும் முயற்சிகளால் கப்பல் மீண்டும் மிதக்கவில்லை என்றால், சில பெட்டகங்களை இறக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அவ்வாறு இயக்க மிகப்பெரிய பளுதூக்கிகள், கரைக்குக் கொண்டு செல்ல வேறு கப்பல்கள் மற்றும் சிறப்புக் கருவிகள் தேவைப்படும். இது நேரத்தை இன்னும் அதிகமாக்கும்.
முன்னதாக , சனிக்கிழமை அன்று மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தோல்வி அடைந்தால் கூடுதலாக இழுவைப் படகுகள் வரவழைக்கப்படும் என்று சூயஸ் கால்வாய் அலுவலர்கள் தெரிவித்திருந்தனர்.
Source: BBC