இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு முகாமைத்துவ குழு 

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு முகாமைத்துவ குழுவொன்றை நியமிக்குமாறு சட்ட மா அதிபர் அறிவிப்பு

by Staff Writer 28-03-2021 | 6:16 PM
Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக முகாமைத்துவ குழுவொன்றை நியமிக்குமாறு சட்ட மா அதிபர், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு அறிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளதாகவும் தற்போதைய நிர்வாகக் குழு சட்டரீதியற்றதெனவும் சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அனுராத விஜேகோன் தெரிவித்துள்ளார். இதற்கமைய, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக முகாமைத்துவ குழுவொன்றை நியமிக்குமாறு சட்ட மா அதிபரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தற்போதைய நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் கடந்த மாதம் 20 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. ஆகவே, நிர்வாக செயற்பாட்டிற்காக இடைக்கால குழுவொன்றை நியமிக்குமாறு கோரி, கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தினால் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அத்துடன், தற்போதைய இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு சட்ட ரீதியானதா என கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தினால் வினவப்பட்ட நிலையில், குறித்த கடிதம் தொடர்பில் சட்ட மா அதிபரினால் பரிசீலிக்கப்பட்டதையடுத்து, இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக ஐவரடங்கிய குழுவொன்றை நாளை (29) நியமிக்க தீர்மானித்துள்ளதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அனுராத விஜேகோன் தெரிவித்துள்ளார்.