கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும்

கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்வதன் மூலமே தமிழக மீனவர்களைப் பாதுகாக்க முடியும்: தொல். திருமாவளவன்

by Bella Dalima 27-03-2021 | 7:46 PM
Colombo (News 1st) கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்வதன் மூலமே தமிழக மீனவர்களைப் பாதுகாக்க முடியும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அதானி குழுமத்திற்குப் பெற்றுத் தருவதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரையும் இந்திய பாதுகாப்புத்துறை ஆலோசகரையும் இலங்கைக்கு அனுப்பி பேச்சுவார்த்தை நடத்திய மோடி அரசாங்கம் தமிழக மீனவர்களின் பிரச்சினையில் அத்தகைய அக்கறையைக் காட்டுவதில்லை என அவர் விடுத்துள்ள அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கச்சத்தீவு ஒப்பந்தம் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என தெரிவித்துள்ள தொல். திருமாவளவன், பாரதிய ஜனதா கட்சி இன்று மிகப் பெரும்பான்மையான பலத்தோடு ஆட்சியில் இருக்கும் நிலையில், கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்வதற்கு தயங்குவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய இறையாண்மை மீது அரசாங்கத்திற்கு உண்மையான அக்கறை இருந்தால், உடனடியாக கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.