வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமை இராஜதந்திர நகர்வு

இலங்கை தொடர்பான பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமை இராஜதந்திர நகர்வு என்கிறது பா.ஜ.க

by Staff Writer 27-03-2021 | 8:24 PM
Colombo (News 1st) இலங்கை தொடர்பான மனித உரிமைகள் பேரவையின் பிரேரணை மீதான வாக்கெடுப்பிலிருந்து இந்தியா விலகியமைக்கான காரணங்கள் தொடர்பில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பேச்சாளர் நாராயணன் திருப்பதி ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளார். வாக்கெடுப்பில் இருந்து இந்தியா வௌியேறியதால் பிரேரணை தோற்றுவிடவில்லை எனவும் அதனை இலங்கைக்கு ஆதரவான நகர்வு என எடுத்துக்கொள்ள முடியாது எனவும் நாராயணன் திருப்பதி குறிப்பிட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டில் இன அழிப்பிற்கு எதிராக கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கடுமையாகக் குரல் கொடுத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த முறை நம்மோடு சேர்ந்து 14 நாடுகளும் தங்களின் வாக்குகளை அளிக்காமல் வௌியேறியுள்ளன. அதனால், இது இலங்கை இந்தியாவை சார்ந்து தான் இருக்க வேண்டும் என்கிற கட்டாயத்தை இனிவரும் காலத்தில் உருவாக்கப்போகின்றது. பாகிஸ்தான், சீனா, பங்களாதேஷ் உட்பட பல நாடுகளின் உதவிகளை இலங்கை கோரியது. தீர்மானம் வெற்றி பெற்றதற்குக் காரணம் நம்மோடு சேர்ந்து வௌிநடப்புச் செய்த நாடுகளையும் சேர்த்துப் பார்த்தோம் என்றால், இந்தியாவின் இராஜதந்திரம் என்னவென்று எல்லோருக்கும் புரியும். அன்றைக்கு நாம் ஆட்சியில் இல்லை. அன்றைக்கு பாராளுமன்றத்தில் பாரதிய ஜனதாக் கட்சி மிகப்பெரிய குரல் கொடுத்தது. இது மனித இன அழிப்பிற்கு சற்றும் குறைவில்லாதது என்று நாம் கூறியிருக்கின்றோம்
என பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பேச்சாளர் நாராயணன் திருப்பதி விளக்கமளித்துள்ளார்.