சர்வதேச அழுத்தங்களை அச்சமின்றி எதிர்கொள்ள முடியும்: ஜனாதிபதி தெரிவிப்பு

சர்வதேச அழுத்தங்களை அச்சமின்றி எதிர்கொள்ள முடியும்: ஜனாதிபதி தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

27 Mar, 2021 | 8:05 pm

Colombo (News 1st) ஜனாதிபதியின் கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மற்றுமொரு கட்டம் இன்று மாத்தறை – பிட்டபெத்தர – கிரிவெல்லகெலே கிராமத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பிலான அறிக்கை குறித்து கருத்து வௌியிட்டார்.

அரசாங்கம் தேசிய பாதுகாப்பு தொடர்பில் வழங்கிய முக்கியத்துவத்தை குறைத்ததாலேயே தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு வீழ்ச்சியுற்றது. சர்வதேச அரங்கிற்கு சென்று ஜெனிவாவில் தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கி நாட்டின் இறைமை மற்றும் சுயாதீனத்தன்மையை முற்றாக சீரழித்தனர். இணை அனுசரணை வழங்குவதிலிருந்து நாம் விலகினோம். அதற்காக அவர்கள் எமக்கு எதிராக செயற்படுகின்றனர். எம்மால் அதனை அச்சமின்றி எதிர்கொள்ள முடியும்

என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வேறு நாடுகளின் புதிய லிபரல் கொள்கைகளை பரப்புவதற்கு அல்லது இந்து சமுத்திரத்தின் பலம்பெருந்திய நாடுகளின் போராட்டங்களுக்குள் அகப்படுவதற்கான தேவை தமக்கில்லை எனவும் ஜனாதிபதி கூறினார்.

தனது ஆட்சிக்காலத்தில் எதிர்கொள்ள நேரிட்ட பிரச்சினைகள் அனைத்தும் கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை திருத்துவதற்கு முயன்றதால் ஏற்பட்டவையென அவர் மேலும் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்