கிளிநொச்சியில் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

by Staff Writer 27-03-2021 | 3:12 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் கிளிநொச்சி நோக்கி பயணித்த கார், எதிர் திசையில் வந்த டிப்பருடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. நேற்றிரவு 9.15 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த காரை செலுத்திய நபர், பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்படும் போது உயிரிழந்துள்ளார். அத்துடன், காரில் பின்னால் இருந்து பயணித்த சிறுவர்கள் இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் பளை பகுதியை சேர்ந்த 38 வயதான தந்தையும் 11 மற்றும் 14 வயதான அவரது மகன்மாரும் உயிரிழந்துள்ளனர். சடலங்கள், யாழ். மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளன. விபத்தை ஏற்படுத்திய டிப்பரின் சாரதி தப்பியோடியுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, யட்டியந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டிய - காந்தி கோவில் பகுதிக்கருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர், பின்னால் செல்ல முற்பட்ட போது பாதசாரி ஒருவர் மீது மோதியுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த பெண், நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். தலவாக்கலை - மிடில்டன் தோட்டத்தைச் சேர்ந்த 75 வயதான பெண் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் டிப்பரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை யட்டியந்தோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 27 ஆம் சந்திப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளொன்று பெண்ணொருவர் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் குறித்த பெண்ணும் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் வீதியில் யாசகம் கேட்கும் ஒருவர் என்பதுடன், ஆளடையாளம் உறுதி செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். நொச்சியாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.