1000 ரூபா சம்பளம்: வர்த்தமானியை இரத்து செய்யக் கோரும் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

by Staff Writer 26-03-2021 | 8:06 PM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பிலான வர்த்தமானியை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தேயிலை மற்றும் இறப்பர் கைத்தொழில் துறைகளை சேர்ந்த தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச சம்பளத்தை 1000 ரூபா வரை அதிகரிக்கும் வகையில் விடுக்கப்பட்ட வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி 20 பெருந்தோட்ட நிறுவனங்கள் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தன. மனுதாரர் சார்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி உயர் நீமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் மற்றுமொரு வழக்கில் ஆஜராகியிருந்தமையினால், வேறொரு நாளில் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு அவரின் கனிஷ்ட சட்டத்தரணி மன்றில் வேண்டுகோள் விடுத்தார். இதனை கருத்திற்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் வழக்கை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானித்தது. இந்த மனுவில் தொழில் அமைச்சர், தேசிய சம்பள நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.