மட்டு. மாநகர ஆணையாளருக்கு எதிரான வழக்கு விசாரணை

மட்டக்களப்பு மாநகர ஆணையாளருக்கு எதிரான வழக்கு விசாரணை

by Staff Writer 26-03-2021 | 6:04 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு மாநகர மேயரால் மாநகர ஆணையாளருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி A.V.ரிஸ்வான் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மாநகர சட்டத்தின் பிரகாரம், மேயருக்குள்ள அதிகாரங்களை அவர் விரும்பும் பட்சத்தில் மாத்திரம் ஆணையாளருக்கு பாரப்படுத்த முடியும். இதனடிப்படையில், புதிய ஆணையாளர் பதவியேற்ற போது 10 அதிகாரங்கள் கையளிக்கப்பட்டிருந்தன. எனினும், அதற்குப் பின்னர் கடந்த பெப்ரவரி 11 ஆம் திகதி மற்றுமொரு சபையின் தீர்மானத்தின் ஊடாக, கையளிக்கப்பட்ட அதிகாரங்கள் மீளப்பெறப்பட்டன. குறித்த அதிகாரங்கள் சட்டத்தின் பிரகாரம் மீளப்பெறப்பட்டிருந்தாலும், அந்த அதிகாரங்களைத் தாமே பயன்படுத்துவதாக தெரிவித்து ஆணையாளர் செயற்படுவதாக மன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதனால், ஆணையாளர் அவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடுவதை தடுப்பதற்கும், மீளப்பெறப்பட்ட அதிகாரங்களை உபயோகிப்பதை சட்ட ரீதியாக நிறுத்துவதற்கும் தடை எழுத்தாணை கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக மாநகர மேயர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி, மனுதாரரால் கோரப்பட்டுள்ள நிவாரணங்கள் ஏன் வழங்கப்படக்கூடாது என கேட்டு அறிவித்தல் அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளார். அந்த அறிவித்தலை கிழக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி ஆணையாளருக்கும் அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு அடுத்த மாதம் முதலாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.