தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை உண்டாக்கும் கூறுகள்?

தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை உண்டாக்கும் கூறுகள்; நுகர்வோர் விவகார அதிகார சபை பரிசோதனை

by Staff Writer 26-03-2021 | 5:13 PM
Colombo (News 1st) நாட்டின் சந்தைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள தேங்காய் எண்ணெயின் தரம் குறித்து பரிசோதனை செய்ய நுகர்வோர் விவகார அதிகார சபை தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், தேங்காய் எண்ணெயின் மாதிரிகள் சேகரிக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களிலுள்ள சந்தைகளில் பெற்றுக்கொள்ளப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகள், ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. புற்றுநோயை உண்டாக்கும் மூலப்பொருள் அடங்கிய தேங்காய் எண்ணெயை ஏற்றுமதி செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக இன்று (26) பாராளுமன்றத்தில் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். தரம் தொடர்பில் சந்தேகிக்கப்படும் தேங்காய் எண்ணெய் அடங்கிய கொள்கலன்கள் வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலைக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை சீல் வைத்துள்ளதாகவும் அவர்கள் அனுமதி வழங்கும் வரை அவற்றை விடுவிக்க முடியாது எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டார். குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தவும், பொறுப்பானவர்கள் மீது சமூக நிலையை பொருட்படுத்தாமல் வழக்குத் தொடர தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் பொலிஸ் மா அதிபரை அரசாங்கம் கோரியுள்ளது.