ஏப்ரல் 21 தாக்குதல்: தமது அமைச்சர்களே தம் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு

ஏப்ரல் 21 தாக்குதல்: தமது அமைச்சர்களே தம் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Mar, 2021 | 3:30 pm

Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்தார்.

தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி அறிந்திருந்ததாகவும் பொறுப்பின்றி நடந்து கொண்டதாகவும் தமது அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்கள் சிலர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தமை, மக்களுக்கு தம் மீதான நம்பிக்கை குறையக் காரணமாகவிருந்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

அமைச்சர்கள் சிலர் மக்கள் மத்தியில் முன்னெடுத்த பொய்யான பிரசாரங்கள் காரணமாகவே தம் மீது பிழையான நிலைப்பாடு மக்களுக்கு ஏற்பட்டதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மக்களுக்கு பொய்களைக் கூறி உருவாக்கப்பட்ட நிலைப்பாடே அதுவென சபாநாயகருக்கு மைத்திரிபால சிறிசேன தௌிவுபடுத்தினார்.

ஶ்ரீமாபோதியில் இடம்பெற்ற தாக்குதல், தலதா மாளிகையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல், மத்திய வங்கி குண்டு வெடிப்பு, மருதானை குண்டு வெடிப்பு, அரந்தலாவ பிக்குகள் கொலை ஆகிய அனைத்தும் ஏப்ரல் 21 தாக்குதல் போன்றதே என சுட்டிக்காட்டிய மைத்திரிபால சிறிசேன, அவற்றுக்கும் ஆணைக்குழுக்களை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

அவற்றுக்கும் பொறுப்புக்கூறல் தொடர்பில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டிய தேவை ஏற்படும் எனவும் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்