கொட்டுகொட தம்மாவாச நாயக்க தேரரின் இறுதிக்கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் இன்று நடைபெற்றன

by Staff Writer 25-03-2021 | 6:11 PM
Colombo (News 1st) இலங்கை அமரபுர பீடத்தின் மகாநாயக்கர், காலஞ்சென்ற கொட்டுகொட தம்மாவாச நாயக்க தேரரின் இறுதிக்கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் இன்று (25) நடைபெற்றன. கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தேரரின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. பொதுமக்களின் அஞ்சலிக்காக கல்கிசை தர்மபாலராம விகாரையில் பிற்பகல் 1.30 வரை தேரரின் பூதவுடல் வைக்கப்பட்டிருந்தது. அனுஷ்டானங்களின் பின்னர், தேரரின் பூதவுடலைத் தாங்கிய வாகனப் பேரணி கல்கிசை தர்மபாலாராமய விகாரையில் இருந்து காலி வீதியூடாக சென்று மாலை 3 .30 அளவில் சுதந்திர சதுக்கத்தை சென்றடைந்தது. வீதியின் இருமருங்கிலும் இருந்த மக்கள் தேரரின் பூதவுடலை தாங்கிச் சென்ற பேழைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மகா சங்கத்தினர், சர்வ மத தலைவர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் தேரரின் இறுதிக்கிரியையில் கலந்துகொண்டனர். கல்கிசை தர்மபாலாராமய விகாரையில் இருந்து புத்த சாசனத்திற்கு சேவையாற்றி வந்த இலங்கை அமரபுர பீடத்தின் மகாநாயக்கர் கொட்டுகொட தம்மாவாச தேரர் தனது 88 ஆவது வயதில் கடந்த 22 ஆம் திகதி இயற்கை எய்தினார்.

ஏனைய செய்திகள்