அனுரகுமார திசாநாயக்க எழுத்தாணை மனுத்தாக்கல்

அனுரகுமார திசாநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனுத்தாக்கல்

by Staff Writer 24-03-2021 | 5:36 PM
Colombo (News 1st) அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஊடாக தம்மை பிரதிவாதியாக பெயர் குறிப்பிட்டு, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வழங்கப்பட்ட பரிந்துரையை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று எழுத்தாணை மனுவொன்றை தாக்கல் செய்தார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட இரண்டு உறுப்பினர்கள், ஆணைக்குழுவின் செயலாளர், அமைச்சரவை உறுப்பினர்கள், அமைச்சரவையின் செயலாளர், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், பொலிஸ்மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறித்த மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர். 2015 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி தொடக்கம் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரச உத்தியோகஸ்தர்கள் ஏதேனும் வகையில் அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பின் , அதுகுறித்து ஆராய்ந்து பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதியால் குறித்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டதாக மனுதாரர் மன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். வரையறுக்கப்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்ட போதிலும், சட்ட மா அதிபரும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் பல்வேறு ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து, அவற்றின் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்களை வழக்கிலிருந்து விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதாகவும் குற்றவாளிகள் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை சட்ட விரோத செயல் என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு செயற்பட்டதனூடாக வழங்கப்பட்ட அதிகாரத்தை மீறி ஆணைக்குழு செயற்பட்டுள்ளதாக மன்றுக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆகையால், ஜனாதிபதி ஆணைக்குழுவினூடாக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்தாதிருக்க சட்ட மா அதிபருக்கு உத்தரவிடுமாறும் கடந்த 18 ஆம் திகதி அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானத்தை இடைநிறுத்த உத்தரவிடுமாறும் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.