துபாயிலிருந்து கொண்டுவரப்பட்ட சடலம் கெசல்வத்த தினுக்கவுடையது; மரபணு பரிசோதனையில் உறுதி

துபாயிலிருந்து கொண்டுவரப்பட்ட சடலம் கெசல்வத்த தினுக்கவுடையது; மரபணு பரிசோதனையில் உறுதி

துபாயிலிருந்து கொண்டுவரப்பட்ட சடலம் கெசல்வத்த தினுக்கவுடையது; மரபணு பரிசோதனையில் உறுதி

எழுத்தாளர் Staff Writer

24 Mar, 2021 | 5:15 pm

Colombo (News 1st) துபாயிலிருந்து கடந்த 18 ஆம் திகதி நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சடலம், கெசல்வத்த தினுக்க என்றழைக்கப்படும் தினுக மதுஷானுடையது தான் என மரபணு பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கெசல்வத்த தினுக்கவின் கைவிரல் அடையாளம், அவரின் தாயாரின் மரபணு பரிசோதனையினூடாக சடலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் திகதி இவர் நாட்டிலிருந்து சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

நாட்டிலிருந்து செல்வதற்கு முன்னர் வாழைத்தோட்டம் பொலிஸாரால் தினுக்க கைது செய்யப்பட்டுள்ளதுடன், அப்போது பெறப்பட்ட கைவிரல் அடையாளம் சடலத்தின் கைவிரல் அடையாளத்துடன் பொருந்தியுள்ளமை தெரிய வந்துள்ளது.

இதன் அடிப்படையில், கெசல்வத்த தினுக்க உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி முற்பகல் 11.25-க்கு ஶ்ரீ லங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் சடலமொன்று நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

ராஜபக்ஸகே கசுன் மதுரங்க என சடலத்தில் பெயரிடப்பட்டிருந்தது.

எனினும், பல குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டிருந்த, கெசல்வத்த தினுக்க என்றழைக்கப்படும் ராஜபக்ஸ ஆராச்சிகே தினுக மதுஷான் என்பவரின் சடலமே கொண்டுவரப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

அதனை உறுதி செய்துகொள்வதற்காக கெசல்வத்த தினுக்கவின் தாயுடைய மரபணு மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியதுடன், அவரின் கைவிரல் அடையாள மாதிரிகளும் பரிசோதிக்கப்பட்டது.

இந்த பரிசோதனைகளின் பெறுபேறுகளுக்கு அமைய, நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சடலம் கெசல்வத்த தினுக்க என உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்