ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிட அனுமதி மறுப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிட வௌிநாட்டவர்க்கு அனுமதி இல்லை

by Bella Dalima 20-03-2021 | 5:58 PM
Colombo (News 1st) தாமதித்து ஆரம்பிக்கப்படும் 2020 டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் போட்டிகளில், வௌிநாட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். வௌிநாட்டு பார்வையாளர்களை நாட்டிற்குள் அனுமதிக்க முடியாதென ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் குழுக்களுக்கு ஜப்பான் சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த நகர்வானது அனைத்து வீரர்களதும் ஜப்பானிய மக்களதும் பாதுகாப்பை உறுதி செய்யுமெனவும் ஒலிம்பிக் போட்டிகளை பாதுகாப்பாக நடத்தி முடிக்க உறுதுணையாக இருக்குமெனவும் ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்து, கொரோனா தொற்றினால் பிற்போடப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இவ்வாண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகி, ஆகஸ்ட் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. பராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 24 ஆம் திகதி ஆரம்பமாகி, செப்டம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.