நளின் பண்டார மீது குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

by Bella Dalima 19-03-2021 | 6:19 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வௌியிட்ட கருத்திற்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அரச புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயினால் எழுத்து மூலம் இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். இந்த முறைப்பாட்டிற்கான வாக்குமூலத்தை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்று மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே இன்று வழங்கியுள்ளார். கிடைத்துள்ள முறைப்பாடு தொடர்பான விசாரணைக்கு உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். அரச புலனாய்வு பிரிவின் தலைவர் குறித்து தவறான தகவல்களை கடந்த 17 ஆம் திகதி வௌியிட்டமை தொடர்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவிற்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார். குரோதத்தை வௌிப்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவித்துள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சந்தேகநபரான சஹரான் ஹாசிம் மலேசியாவில் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவை சந்தித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். சஹரான் ஹாஷிம் மலேசியா, இந்தியா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லத் தேவையான வசதிகளை சுரேஷ் சாலே ஏற்படுத்தி கொடுத்ததாகவும் நளின் பண்டார கூறியுள்ளார். இந்த அனைத்து விடயங்கள் தொடர்பிலும், சஹரான் ஹாசிம் குறித்தும் முழுமையான விடயங்களை மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே அறிந்திருந்தும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் ஆணைக்குழு விசாரணைக்கு அழைக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தனது உரையில் தெரிவித்திருந்தார். பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவின் இந்த கருத்துக்கள் அனைத்தும் பொய்யானது என தெரிவித்து மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு தொடர்பான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.