by Staff Writer 19-03-2021 | 8:23 PM
Colombo (News 1st) 21 ஆம் நூற்றாண்டில் ஆசியாவின் வளம் குறித்து பாரிய எதிர்பார்ப்புடன் இருக்கும் புதிய தலைமுறை, சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னோர்கள் ஆற்றிய அளப்பரிய அர்ப்பணிப்பு தொடர்பாக அறிந்திருக்க வேண்டியது அவசியம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
பங்களாதேஷின் டாக்கா நகரில் நடைபெற்ற அந்நாட்டு சுதந்திர ஸ்வர்ண ஜெயந்தி வைபவத்தில் உரையாற்றிய போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பை ஏற்று பிரதமர் இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இன்று காலை பங்களாதேஷை சென்றடைந்தார்.
டாக்காவிலுள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் பங்களாதேஷ் பிரதமரினால் இலங்கை பிரதமருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
பங்களாதேஷ் சுதந்திரப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, விருந்தினர்களின் பதிவேட்டிலும் தனது எண்ணத்தினை பதிவு செய்தார்.
பிரதமரின் பங்களாதேஷ் விஜயத்தை நினைவுகூரும் வகையில், அந்நாட்டு சுதந்திரப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களின் நினைவிடத்தில் மர நடுகையும் மேற்கொள்ளப்பட்டது.
விஜயத்தின் முதல் நாளான இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் பங்களாதேஷ் வௌிவிவகார அமைச்சர் கலாநிதி ஏ.கே. அப்துல் மோமனுக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதன்போது, இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால இராஜதந்திர உறவு, வர்த்தகம், முதலீட்டு தொடர்புகளை விஸ்தரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாள் விஜயத்தின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அந்நாட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் நடத்தவுள்ளார்.