பங்களாதேஷ் சென்றடைந்தார் பிரதமர்

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பங்களாதேஷ் சென்றடைந்தார் பிரதமர்

by Bella Dalima 19-03-2021 | 3:16 PM
Colombo (News 1st) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பங்களாதேஷை இன்று காலை சென்றடைந்தார். டாக்கா விமான நிலையத்தை அடைந்த பிரதமரை பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா வரவேற்றுள்ளார். பங்களாதேஷ் குடியரசின் தந்தையாக போற்றப்படும் பங்கபந்து ​ஷேக் முஜிபர் ரஹ்மானின் (Bangabandhu Sheikh Mujibur Rahman) ஜனன தின நூற்றாண்டு விழா மற்றும் பங்களாதேஷின் சுதந்திர பொன் விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் பங்களாதேஷ் சென்றுள்ளார். அத்துடன், பிரதமர் இன்று பிற்பகல் விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. விஜயத்தின் போது பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது அப்துல் ஹமீத், பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பங்களாதேஷ் மத்திய வங்கியின் ஆளுநர் ஆகியோருடன் கலந்துரையாடல்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மேற்கொள்ளவுள்ளார். அத்துடன் விவசாயம், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் பிரதமர் ஈடுபடவுள்ளார். பங்களாதேஷ் குடியரசின் அழைப்பு மற்றும் இந்த விஜயத்தின் போது நடத்தப்படவுள்ள உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தைகளும் இலங்கை மற்றும் பங்களாதேஷூக்கு இடையிலான நீண்டகால வலுவான உறவை மேலும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே விவசாயம், தொழில், கல்வி, சுகாதாரம் மற்றும் கலாசார ஒத்துழைப்பு போன்ற பல்வேறு துறைகளில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன.