காடழிப்பை நிறுத்துமாறு வலியுறுத்தி கொழும்பில் அமைதிப் போராட்டம்

காடழிப்பை நிறுத்துமாறு வலியுறுத்தி கொழும்பில் அமைதிப் போராட்டம்

எழுத்தாளர் Bella Dalima

19 Mar, 2021 | 8:50 pm

Colombo (News 1st) வன விலங்குகள் மற்றும் இயற்கை வள பாதுகாப்பு இளைஞர் சங்கம் கொழும்பு விஹாரமஹா தேவி பூங்காவில் கவனயீர்ப்பு போராட்டத்தை அமைதியான முறையில் மேற்கொண்டனர்.

இயற்கை வளத்தை அழிக்கும் செயற்பாடுகளுக்கு எதிராகவே இந்த சாத்வீக கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.

உலக காலநிலை மாற்றத்திற்கு எதிரான தினத்திற்கு இணையாக, கடந்த ஒரு வார காலமாக விஹாரமஹா தேவி பூங்காவிற்கு சென்ற இளைஞர், யுவதிகள், சிறுவர்களுடன் இணைந்து காடழிப்பு தொடர்பான சித்திரமொன்றை வரைந்து, அதனை காட்சிப்படுத்தினர்.

எனினும், இன்று முற்பகல் 10 மணியளவில் அவ்விடத்திற்கு சென்றிருந்த கொழும்பு மாநகர சபை ஊழியர்கள் அதனை அப்புறப்படுத்தினர்.

பொலிஸாரின் அனுமதியின்றியும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும் அச்சித்திரம் வைக்கப்பட்டிருப்பதால், அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்ததாக கொழும்பு மாநகர ஆணையாளர் ரோஷினி திசாநாயக்க குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், நண்பகல் 12 மணியளவில் அந்த சித்திரத்தை குறித்த இடத்தில் காட்சிப்படுத்த மாநகர சபை ஊழியர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

இதனையடுத்து, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனும் பொலிஸ் அதிகாரிகள் சிலரும் குறித்த இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.

பின்னர் குறித்த சித்திரத்துடனான பதாதையை அப்புறப்படுத்த பொலிஸாரும் நகர சபை ஊழியர்களும் தீர்மானித்தனர்.

பின்னர் வன விலங்குகள் மற்றும் இயற்கை வள பாதுகாப்பு இளைஞர் சங்கத்தின் செயற்பாட்டாளர்களுடன் இணைந்த சுற்றாடல் அமைப்புகளும், சிவில் செயற்பாட்டாளர்களும் அவ்விடத்தில் மௌனமாக கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்