by Bella Dalima 19-03-2021 | 5:17 PM
Colombo (News 1st) கச்சத்தீவை மீட்க இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே வி.கே.சிங் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
தமிழக மீனவர் பிரச்சினையில் கச்சத்தீவை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக அவர் கூறியதாக த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.
கச்சத்தீவு பிரச்சினை சர்வதேசப் பிரச்சினை அல்லவெனவும் சீனா இலங்கையுடன் நட்புறவு கொண்டிருந்தாலும், இந்தியா தான் இலங்கைக்கு அண்டை நட்பு நாடு எனவும் மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் கூறியுள்ளார்.
இலங்கை அரசுடன் மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் திரும்ப பெறப்பட்டு மீனவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண ஆழ்கடல் மீன்பிடித் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.