புதிய தனிமைப்படுத்தல் விதிமுறைகள்

வௌிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கான புதிய தனிமைப்படுத்தல் விதிமுறைகள்

by Bella Dalima 18-03-2021 | 5:48 PM
Colombo (News 1st) வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் மற்றும் வௌிநாட்டவர்களுக்கான புதிய தனிமைப்படுத்தல் விதிமுறைகள் அடங்கிய சுற்றுநிரூபம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வௌியிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாமல் நாட்டிற்கு வருவோரை ஹோட்டல்களில் தனிமைப்படுத்தும் காலம் 7 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியை பெறாமல் வருகை தருவோர் முதலாவது நாள் மற்றும் ஏழாவது நாளில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். இந்த பரிசோதனைகளில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படாவிட்டால், அவர்கள் ஏழாவது நாளில் ஹோட்டல் தனிமைப்படுத்தலை நிறைவு செய்ய முடியும். 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் காலப்பகுதியின் எஞ்சிய நாட்களை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் வீடுகளில் நிறைவு செய்ய வேண்டும். இதனிடையே, கொரோனா தடுப்பூசி பெற்று இரண்டு வாரங்களின் பின்னர் நாட்டிற்கு வருகை தரும் பயணிகளுக்கு மற்றுமொரு தனிமைப்படுத்தல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி பெற்று வருகை தருவோர் விமான நிலைய வைத்திய அதிகாரியிடம், தடுப்பூசி பெற்றுக்கொண்டமைக்கான சான்றிதழின் முதற்பிரதியை சமர்ப்பிக்க வேண்டும் என்பதுடன், அவைஆங்கிலம் தவிர்ந்த வேறு மொழிகளில் காணப்பட்டால் உறுதிப்படுத்தப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பு சான்றிதழ் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். அத்தகைய பயணிகளை அரச அதிகாரிகள் தனிமைப்படுத்தல் ஹோட்டல்கள் அல்லது தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைப்பார்கள் என சுற்றுநிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் நாட்டிற்கு வந்து 24 மணித்தியாலங்களுக்குள் சுகாதார அமைச்சினால் அனுமதியளிக்கப்பட்ட தனியார் அல்லது அரச இரசாயனக்கூடமொன்றில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதன் பெறுபேறுகள் கிடைத்தவுடன் அவர்கள் ஹோட்டல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தனியார் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி வீடுகளுக்கு செல்ல வெண்டும் என்பதுடன், தமது தனிமைப்படுத்தல் செயற்பாடு குறித்து பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரிக்கு அறிவிக்க வேண்டியதும் அவசியமாகும். பொதுவான தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற பயணிகள் முலாவது நாளிலும் 10 ஆவது நாளிலும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். இந்த இரண்டு பரிசோதனைகளின் போதும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படாவிட்டால் 10 ஆவது நாளில் தனிமைப்படுத்தலில் இருந்து அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் எஞ்சிய நான்கு நாட்களும் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.