காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் ஆவணங்கள் அனுராதபுரத்தில் இருந்து மீண்டும் யாழ். அலுவலகத்திற்கு மாற்றம்

by Staff Writer 18-03-2021 | 5:59 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் ஆவணங்கள் அனுராதபுரத்தில் இருந்து இன்று மீண்டும் யாழ் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் உள்ள காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் அண்மையில் அனுராதபுரம் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களினதும் ஆவணங்கள் இந்த அலுவலகத்தில் இருந்ததுடன், அதில் யாழ். மாவட்டத்திற்குரிய ஆவணங்களைத் தவிர ஏனைய மாவட்டங்களின் ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. எனினும், இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பை தெரிவித்ததுடன், மக்கள் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ஆவணங்கள் மீண்டும் இன்று பிற்பகல் தமது அலுவலகத்திற்கு கிடைத்துள்ளதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் வடக்கு வலய பணிப்பாளர் தி.விமலன் தெரிவித்தார். தமது அலுவலகத்திற்கு கிடைத்திருந்த யாழ். அலுவலக ஆவணங்கள் இன்று மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் வடமத்திய வலய பிரதி பணிப்பாளர் W.M.பண்டாரவும் அதனை உறுதிப்படுத்தினார்.