வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தும் இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது: வீ.முரளிதரன்

by Staff Writer 18-03-2021 | 7:08 PM
Colombo (News 1st) இலங்கைத் தமிழர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக இந்தியா அறிவித்துள்ளது. இலங்கை தொடர்பாக மக்களவையில் நேற்று (17) எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு இந்தியாவின் மத்திய வௌியுறவுத்துறை இணை அமைச்சர் வீ.முரளிதரன் பதிலளித்துள்ளார். கடந்த வருடம் செப்டம்பர் மாதமும் கடந்த மாதமும் இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தியதை இந்தியாவின் மத்திய வௌியுறவுத்துறை இணை அமைச்சர் சுட்டிக்காட்டியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இலங்கையில் சமத்துவம், சமாதானம், நீதி ஆகியவற்றை விரும்பும் தமிழர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு பிரதமர் மோடி வலியுறுத்தியதாக இந்தியாவின் மத்திய வௌியுறவுத்துறை இணை அமைச்சர் வீ.முரளிதரன் கூறியுள்ளார். இலங்கையின் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தி சமரசத்திற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லுமாறும் இந்திய பிரதமர் கோரியதாக மத்திய இணை அமைச்சரை மேற்கோள்காட்டி தினமணி செய்தி வௌியிட்டுள்ளது. இலங்கை வௌியுறவுத்துறை அமைச்சருடனான சந்திப்புகளின்போது, இலங்கையின் சமரச நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் நீண்டகால ஆதரவு இருப்பதை இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் அழுத்தமாக எடுத்துரைத்ததாகவும் வீ.மூரளிதரன் தெரிவித்துள்ளார். கண்ணியத்தை விரும்பும் இலங்கைத் தமிழர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமாறும் இந்த சந்திப்புகளின் போது வலியுறுத்தப்பட்டதாக மத்திய இணை அமைச்சர் மக்களவையில் தெரிவித்துள்ளார்.