சிங்கராஜ வனம்; தனியார் காணிகள் அரசுடைமையாக்கல்

சிங்கராஜ வனத்திற்கு அருகிலுள்ள தனியார் காணிகளை அரசுடைமையாக்க திட்டம்

by Staff Writer 17-03-2021 | 8:37 AM
Colombo (News 1st) சிங்கராஜ வனப்பகுதியைச் சுற்றியுள்ள தனியாருக்குச் சொந்தமான நிலங்களை, விரைவில் அரசாங்கம் பொறுப்பேற்கவுள்ளதாக வனப் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. அவ்வாறான சுமார் 400 ஹெக்டேயர் நிலங்கள் உள்ளதென மதிப்பிடப்பட்டுள்ளதாக வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் நிஷாந்த எதிரிசிங்க தெரிவித்துள்ளார். குறித்த நிலப்பகுதி காடாக இருந்த போதிலும், தனியார் நிலப்பரப்பாக காணப்படுவதால் அதில் இடம்பெறும் காடழிப்பைத் தடுப்பதற்கு வனப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ், வனப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு எவ்வித அதிகாரமும் இல்லையென அவர் கூறியுள்ளார். குறித்த காணிகளைக் கையகப்படுத்துவதன் ஊடாக சிங்கராஜ வனப் பகுதியின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த முடியும் எனவும் வனப் பாதுகாப்பு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, சிரச லக்‌ஷபதி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிங்கராஜ வனம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பாக கருத்துகளை வௌியிட்ட யுவதியிடம் வனப் பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று விசாரணைகளை மேற்கொண்டனர். இதற்கு முன்னர், இரண்டு பொலிஸ் அதிகாரிகளினால் குறித்த யுவதியிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.