ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளில் இந்தியா ஈடுபடாது: ஜயநாத் கொலம்பகே

by Staff Writer 17-03-2021 | 8:43 PM
Colombo (News 1st) ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளில் இந்தியா ஈடுபடாது என உறுதியளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார். ஜனாதிபதியின் ஊடக பணிப்பாளர் ஜெனரல் மொஹான் சமரநாயக்கவுடன் இணையத்தளம் ஊடாக இன்று நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் கூறினார். வௌிவிவகார அமைச்சின் செயலாளர் கூறுவதைப் போன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது. எனினும், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு மத்தியில், இந்திய அரசாங்கம் இலங்கை தொடர்பில் இக்கட்டான நிலையில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். தமிழகத்தில் ஆளும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இம்முறை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலை இலக்காகக் கொண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வௌியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாகவும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதில் 30 ஆவது விடயமாக இலங்கையில் தனி ஈழம் அமைப்பது தொடர்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈழத் தமிழர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் நிரந்தர நீதி கிடைக்க வழிகாணுதல், இலங்கையில் நடந்த இனப்படுகொலை, வன்புணர்வு போன்ற கொடூரமான குற்றங்களில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உரிய நீதி கிடைத்திடவும், குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கிடைத்திடவும், தமிழ் ஈழ மக்கள் சுதந்திரமாக வாழ தனி ஈழம் அமைந்திடவும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது புதிய சர்வதேச நடுநிலை சுதந்திரத் தீர்ப்பாயம் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கும்படி ஐக்கிய நாடுகள் சபைக்கும் மத்திய அரசுக்கும் அ.இ. அ.தி.மு.க தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வலியுறுத்தும்
என அதில் கூறப்பட்டுள்ளது. இந்தியப் பிதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதாக் கட்சி அங்கம் வகிக்கும் அ.இ.அ.தி.மு.க கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் இலங்கையில் தனி ஈழத்தை அமைத்தல் தொடர்பில் குறிப்பிடப்படும் போது, ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பிலான தமது நிலைப்பாட்டை இந்தியா ஏற்கனவே வௌியிட்டிருந்தது. 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், மாகாண சபை முறைமை தொடர்ந்தும் செயற்படுத்தப்பட வேண்டும் என்பதும் இந்தியாவின் நிலைப்பாடு என மனித உரிமைகள் பேரவையில் இந்தியா குறிப்பிட்டிருந்தது. எனினும், தற்போது அரசாங்கத்தில் உள்ள பல்வேறு தரப்பினர் மாகாண சபை முறைமை இரத்து செய்யப்பட வேண்டும் என தொடர்ந்தும் கூறி வருகின்றனர். ஆளும் கட்சியின் தலைவர்களும் மாவட்ட தலைவர்களும் ஜனாதிபதியுடன் நேற்று (16) கலந்துரையாடிய போது, மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.