தலைமன்னார் விபத்தில் உயிரிழந்த மாணவரின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெற்றன

தலைமன்னார் விபத்தில் உயிரிழந்த மாணவரின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெற்றன

எழுத்தாளர் Staff Writer

17 Mar, 2021 | 6:39 pm

Colombo (News 1st) நேற்று (16) இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்ற தலைமன்னார் மாணவரின் இறுதிக்கிரியைகள் இன்று மாலை நடைபெற்றன.

தலைமன்னார் உயர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 9 ஆம் தரத்தில் நேற்று வரை கல்வி கற்ற பாலச்சந்திரன் தருணின் பூதவுடல் இன்று பாடசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

தலைமன்னார் பியர் கிழக்கு பகுதியில் ஒரு வறிய குடும்பத்தில் பிறந்த முதலாவது பிள்ளையே பாலசந்திரன் தருண்.

தனது இரண்டு தங்கைகளுடன் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலே இவர் கல்வி பயின்று வந்துள்ளார்.

மீன்பிடித் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட பாலசந்திரன் தருணின் தந்தை நோய்வாய்ப்பட்டு கடந்த சில மாதங்களாக தொழிலுக்கும் செல்லவில்லை.

மரக்கறிக்கடையொன்றில் வேலை செய்யும் தருணின் தாய் குடும்பத்தின் சுமையை தாங்கி வருகிறார்.

துயர் மிக வாழ்க்கை தொடரும் நிலையிலேயே, கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலில் மன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த பஸ் மோதியதில், பஸ்ஸில் பயணித்த தருண் உயிரிழந்தார்.

300 மீட்டர் தொலைவில் ரயில் நிலையம் உள்ளமையினால், குறைந்த வேகத்தில் ரயில் பயணித்தபோதே விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெற்ற போது ரயில் கடவை காப்பாளர் அவ்விடத்தில் இருக்கவில்லை என்பதுடன், ரயில் கடவை திறந்திருந்ததாக விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இது பொறுப்பற்ற செயல் எனவும் கடவை காப்பாளர் இருந்திருந்தால் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் எனவும் மக்கள் ஆதங்கம் வௌியிட்டனர்.

தருணின் பூதவுடல் இன்று மாலை தலைமன்னார் பியர் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதேவேளை, இந்த விபத்தில் காயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக நேற்று இரத்த தட்டுப்பாடு நிலவியது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகம் விடுத்த வேண்டுகோளை அடுத்து, அதிகளவிலான இளைஞர் யுவதிகள் தன்னார்வமாக வைத்தியசாலைக்கு சென்று இரத்த தானம் செய்தனர்.

இந்த விபத்து தொடர்பில் பஸ் சாரதியும், ரயில் கடவையின் கடமை நேர காவலாளியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர்களை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்