Blue Ocean குழுமத்திற்கு எதிரான வழக்கு விசாரணை 

Blue Ocean குழுமத்திற்கு எதிரான மோசடி வழக்கை முன்கொண்டு செல்லுமாறு நீதவான் உத்தரவு

by Staff Writer 16-03-2021 | 8:43 PM
Colombo (News 1st) Blue Ocean Breeze and Blue Ocean Realty நிறுவனங்களுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அடுக்குமாடி குடியிருப்பை நிர்மாணித்து வழங்குவதாக உறுதியளித்து பணம் பெற்றுக்கொண்டு அதனை செய்யத் தவறியுள்ளதாக குறித்த நிறுவனங்களின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. நம்பிக்கை துரோகம், நிதி மோசடி மற்றும் ஐரோப்பாவில் வசிக்கும் இலங்கை வர்த்தகரிடமிருந்து 275 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக Blue Ocean குழுமத்தின் பணிப்பாளர்களான சிவராஜா துமிலன் மற்றும் சுரனி துமிலன் ஆகிய இருவருக்கும் எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. குறித்த பணிப்பாளர்கள் இருவருக்கும் இதற்கு முன்பு அறிவித்தல் பத்திரம் அனுப்பப்பட்டது. இந்த கொடுக்கல் வாங்கல் சிவில் தன்மையின் கீழ் இடம்பெற்றுள்ளதால், அது நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படக்கூடாது என்ற வழக்கு கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மோசடிக்காரர்களுக்கு எதிராக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க தெரிவித்தார். முறைப்பாட்டாளர் தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு நீதிமன்றில் விடயங்களை சமர்ப்பித்தது. மோசடிக்காரர்கள் குறித்த பணத்தை ஏமாற்றிப் பெற்றுள்ளதுடன், 2019 டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்பு அடுக்குமாடிக் குடியிருப்பை நிர்மாணித்துக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தாலும் இதுவரை அதனை நிறைவேற்றவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம் நீதிமன்றில் தெரிவித்தது. மோசடிக்காரர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட எதிர்ப்பை கல்கிசை நீதவான் நிராகரித்ததுடன், சம்பந்தப்பட்ட இரண்டு பணிப்பாளர்களுக்கும் அந்த நிறுவனத்திற்கும் எதிராக தொடரப்பட்டுள்ள மோசடி வழக்கை முன்கொண்டு செல்வதற்கு உத்தரவிட்டார்.