1000 ரூபா சம்பளம்: வர்த்தமானியை இரத்து செய்யக் கோரி 20 பெருந்தோட்ட நிறுவனங்கள் மனு தாக்கல்

by Staff Writer 16-03-2021 | 8:51 PM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா நாளாந்த சம்பள விவகாரம் மீண்டும் தேசிய அரசியல் அரங்கின் பிரதான பேசுபொருளாகியுள்ளது. 1000 ரூபா சம்பள அதிகரிப்பிற்கான வர்த்தமானியை இரத்து செய்யுமாறு கோரி, 20 பெருந்தோட்ட நிறுவனங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளன. தொழில் அமைச்சர், அமைச்சின் செயலாளர் மற்றும் சம்பள நிர்ணய சபை என்பன எழுத்தாணை மனுவின் பிரதிவாதி தரப்புக்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. தொழில் அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானிக்கு அமைய செயற்படுவதனூடாக, தமது தொழிற்றுறை பாரியளவில் பாதிக்கப்படுவதாகவும் அதனால் குறித்த வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்குமாறும் மனுதாரர்களால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரப்பட்டுள்ளது. அரசாங்கத்துடன் மோதி சம்பள நிர்ணய சபையின் தீர்மானம் பிழை என்று தொழிற்சங்கங்கள் நீதிமன்றம் சென்றுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இந்த விடயங்கள் தொடர்பில் மன்றில் தௌிவுபடுத்தி வழக்கில் வெற்றி பெற முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தொழிலாளர்களுக்கு கிடைக்கும் சலுகைகளை தாமதப்படுத்தும் முயற்சியில் நிறுவனங்கள் இறங்கியுள்ளதாகவும் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.