ரஞ்சனின் மனுவை நிராகரிக்குமாறு கோரிக்கை

ரஞ்சன் ராமநாயக்கவின் மனுவை நிராகரிக்குமாறு நீதிமன்றில் கோரிக்கை

by Staff Writer 16-03-2021 | 5:38 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் பதவி வறிதாவதை தடுக்கும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு ரஞ்சன் ராமநாயக்க முன்வைத்துள்ள கோரிக்கை சட்டபூர்வமற்ற, ஆதாரமற்ற கோரிக்கை என்பதால், மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகிய சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்திக்கா ஜேமுனி டி சில்வா இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரிலேயே தமது சேவை நாடுநருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ரஞ்சன் ராமநாயக்க சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி பசீஸ் முஸ்தஃபா நீதிபதிபகள் குழாமிடம் தெரிவித்தார். அது தண்டனைக்குரியு குற்றம் இல்லையென்பதால், சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கு சட்ட ரீதியிலான இயலுமை இல்லையென அவர் மன்றின் கவனத்திற்கு கொண்டுவந்தார். மனுதாரரான ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ள அறிவித்தலை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடித்த நீதிபதிகள் குழாம், ரஞ்சன் ராமநாயக்கவின் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதை பிற்போடுவதற்கு தீர்மானித்துள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு நிரூபணமானதைத் தொடர்ந்து ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 04 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வறிதாவதை தடுக்குமாறு கோரி ரஞ்சன் ராமநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.