தலைமன்னாரில் பஸ் ரயிலுடன் மோதி விபத்து: மாணவர் உயிரிழப்பு, 15 பேர் காயம்

தலைமன்னாரில் பஸ் ரயிலுடன் மோதி விபத்து: மாணவர் உயிரிழப்பு, 15 பேர் காயம்

எழுத்தாளர் Bella Dalima

16 Mar, 2021 | 3:24 pm

Colombo (News 1st) தலைமன்னாரில் பஸ் ஒன்று ரயிலுடன் மோதி
விபத்திற்குள்ளானதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளனர்.

தலைமன்னார் – பியர் இறங்குதுறை பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்தில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் பாடசாலை மாணவர்கள் எனவும் காயமடைந்தவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து இடம்பெற்றபோது பஸ்ஸில் 30 பேர் வரை பயணித்துள்ளதுடன், அவர்களில் 20 பேர் பாடசாலை மாணவர்களாவர்.

ஒன்பதாம் தரத்தில் கல்வி கற்கும் 14 வயதான மாணவர் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்து இடம்பெற்ற போது, ரயில் கடவை காப்பாளர் அவ்விடத்தில் இருக்கவில்லை என்பதுடன், ரயில் கடவை திறந்திருந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

300 மீட்டர் தொலைவில் ரயில் தரிப்பின் அமைவிடம் உள்ளதால், ரயில் குறைந்த வேகத்தில் பயணித்தபோதே இந்த விபத்து நேர்ந்ததாக, சம்பவத்தை நேரில் கண்டர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்