அதானி உரிமையாளர் இலங்கை அரசுக்கு நன்றி தெரிவிப்பு 

by Staff Writer 16-03-2021 | 11:16 AM
Colombo (News 1st) கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை நிர்மாணிப்பதற்காக தமக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டமை தொடர்பில் இந்தியாவின் அதானி குழும உரிமையாளர் கௌதம் அதானி, இலங்கை அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம், துறைமுக அதிகார சபை மற்றும் ஜோன் கீல்ஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவிப்பதாக அவரது ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டு தொழில் முயற்சி இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான வரலாற்று உறவின் சின்னமாக அமையுமென கௌதம் அதானி தெரிவித்துள்ளார். இதனிடையே, கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51 வீத முதலீட்டுக்கு அதானி குழுமத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப்பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். எஞ்சிய 49 வீத பங்குகளில் முதலீடு செய்வதற்கு துறைமுக அதிகார சபை மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்குமெனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். அதானி குழுமத்திற்கு கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தில் 51 வீத பங்குகளை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளதாக Adani Ports and Special Economic Zone Ltd இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, தமது நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதியான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 35 வருட காலத்திற்கு கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை செயற்படுத்தவுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்மாணப் பணிகளை முன்னெடுத்து பொறுப்பேற்கும் அடிப்படையில் இந்த முதலீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் 3.5 மில்லியன் கொள்கலன் நடவடிக்கை கொள்ளளவுடன் இதனை முன்னெடுப்பதே தமது இலக்கு எனவும் அதானி குழுமம் அறிவித்துள்ளது. இதனிடையே, Adani Ports and Special Economic Zone நிறுவனத்துடன் இணைந்து மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்துடன் இணையுமாறு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவனம் கொழும்பு பங்குச்சந்தைக்கு அறிவித்துள்ளது. இது தொடர்பிலான உடன்படிக்கை எதிர்காலத்தில் கைச்சாத்திடப்படவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல கூறும் வகையில், மேற்கு முனையத்தின் 51 வீத பங்கு இந்தியாவின் அதானி நிறுவனம் மற்றும் இலங்கையின் ஜோன் கீல்ஸ் குழுமத்திற்கு உரித்தானதாகும். எஞ்சிய 49 வீதத்திற்கான முதலீட்டு சந்தர்ப்பம் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு கிடைக்கவுள்ளது. இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் முழுமையாக இந்திய நிறுவனமொன்றுக்கு உரித்தாகும் அல்லவா? கிழக்கு முனையம் தொடர்பிலான சர்ச்சை நிலவியபோது, மீள் ஏற்றுமதியின் பெரும்பாலான பங்கு இந்தியாவுடன் இடம்பெறுவதால் இந்தியாவின் ஒத்துழைப்பு தேவை என அரசாங்கம் சுட்டிக்காட்டியிருந்தது. மேற்கு முனையத்தில் அதானி நிறுவனம் கொள்கலன் செயற்பாடுகளை முன்னெடுத்தால், அதனுடன் போட்டியிடும் இயலுமை கிழக்கு முனையத்திற்கு உள்ளதா? ஏற்கனவே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அண்மித்த SAGT முனையத்தின் பெருமளவு உரிமம் ஜோன் கீல்ஸ் நிறுவனத்திடம் உள்ளது. இதன் காரணமாக எதிர்காலத்தில் கிழக்கு முனையமும் ஜய கொள்கலன் முனையத்தைப் போன்று வர்த்தக சவாலை எதிர்நோக்க நேரிடுமா? கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு, மேற்கு மற்றும் SAGT முனையம் ஆகிய அனைத்தையும் இந்திய நிறுவனத்திடம் தாரைவார்ப்பதற்காகவா இந்தத் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன?