by Staff Writer 15-03-2021 | 2:13 PM
Colombo (News 1st) கொஹுவலையில் கார் ஒன்றிற்குள் இருந்து மீட்கப்பட்ட சடலம், பாத்திய மாவத்தையைச் சேர்ந்த 33 வயதான வர்த்தகருடையது என மரபணு (DNA) பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு - கொஹுவலை ஆசிரி மாவத்தை பகுதியில் தீ விபத்துக்கு உள்ளாகிய காரொன்றில் இருந்து கருகிய நிலையில் கடந்த வியாழக்கிழமை சடலமொன்று மீட்கப்பட்டது.
பாத்திய மாவத்தை பகுதியைச் சேர்ந்த 33 வயதான வர்த்தகர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டனர்.
இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவரை அடையாளம் காண்பதற்காக DNA பரிசோதனை நடத்த கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டது.
சந்தேகிக்கப்பட்ட இளைஞரின் பெற்றோரினது மரபணுக்களை கொண்டு அரச இரசாயன பகுப்பாய்வாளரினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பாத்திய மாவத்தையைச் சேர்ந்த வர்த்தகரே உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இரவு உணவை பெறுவதற்காக காரில் பயணித்த போது இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.