உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான ஒத்துழைப்பை வழங்க தயார் - ஜனாதிபதி

by Staff Writer 15-03-2021 | 8:31 PM
Colombo (News 1st) ஆடைக் கைத்தொழிற்துறை எதிர்நோக்கியுள்ள சவால்களை அடையாளங் கண்டுள்ள அரசாங்கம், உற்பத்தித் திறனையும் தரத்தையும் அதிகரிப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். ஒன்றிணைந்த ஆடைத்தொழிற்றுறை சங்க ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (15) காலை நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு ஆடைத் தொழிற்றுறையில் புதிய எழுச்சியை ஏற்படுத்துவதன் மூலம் அதிகளவு அந்நியச் செலாவணியை ஈட்ட முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இந்த இலக்கை அடைவதற்கு அரசாங்கம் மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்படுவதுடன், இந்த வருடத்தின் இலக்கு 5.1 பில்லியன் டொலர் என இந்தக் கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது. சுகாதாரப் பரிந்துரைகளினால் இந்தத் துறையின் எதிர்காலப் பயணத்திற்கு ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து, வர்த்தகர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர். நாட்டின் பொது சுகாதார நிலைமைக்கு தாக்கம் செலுத்தாத விதத்தில், ஆடைத் தொழிற்றுறையில் சில சுகாதார அறிவுறுத்தல்களை தளர்த்துவதற்கான இயலுமை குறித்து இதன்போது யோசனைகள் முன்வைக்கப்பட்டன. ஆடைக் கைத்தொழில் துறையின் மனித வள தொழிற்பாடு தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன், தரமான மற்றும் பாதுகாப்பான தொழில் வாய்ப்பை ஏற்படுத்துவதன் மூலம் இந்தத் துறையில் இளைஞர், யுவதிகளை உள்வாங்க முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.