வட கொரியாவை தொடர்புகொள்ளும் முயற்சி தோல்வி

வட கொரியாவை தொடர்புகொள்ளும் முயற்சி தோல்வி - அமெரிக்கா

by Staff Writer 14-03-2021 | 6:35 PM
Colombo (News 1st) வட கொரிய அரசாங்கத்தை தொடர்புகொள்ள மேற்கொள்ளப்படும் முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்திலிருந்து வட கொரிய அரசாங்கத்தை தொடர்புகொள்ள முயற்சிப்பதாகவும் இருப்பினும் அதற்கான பதிலை அது வழங்கவில்லை எனவும் ஜனாதிபதி பைடனின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்குமிடையிலான பதற்றங்கள் அதிகரிப்பதைத் தடுப்பதற்காக, வட கொரியாவை பல்வேறு வழிகளில் தொடர்புகொள்ள முயற்சித்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். வட கொரியாவின் அணுவாயுதம் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை திட்டங்களால், அமெரிக்காவுக்கும் அந்த நாட்டிற்குமிடையில் தொடர்ச்சியான முறுகல் நிலை நீடித்துவருகின்றது. வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் மற்றும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கிடையில் 3 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருந்தன. அமெரிக்கா மற்றும் மேற்குலக வல்லரசுகளின் பிரதான கோரிக்கையான, அணுவாயுத பயன்பாட்டை கைவிட வட கொரியா மறுப்பு தெரிவித்தமையினால் குறித்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.