யாழ். காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு அலுவலக ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்படுவது ஏன்?

by Staff Writer 13-03-2021 | 8:37 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணத்தில் உள்ள காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களின் ஒரு தொகுதி அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் வடக்கு வலய பணிப்பாளர் தெரிவித்திருந்தார். வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களினதும் ஆவணங்கள் இந்த அலுவலகத்தில் இருந்ததாகவும், அதில் யாழ். மாவட்டத்திற்குரிய ஆவணங்களைத் தவிர ஏனைய மாவட்டங்களின் ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார். காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு பணிப்பாளரின் கடிதத்தின் பிரகாரமே ஆவணங்கள் அனுப்பப்பட்டதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் வடக்கு வலய பணிப்பாளர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், யாழ். அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் தமது அலுவலகத்திற்கு கிடைத்துள்ளதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் வட மத்திய வலய பிரதி பணிப்பாளர் W.M.பண்டார தெரிவித்தார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஆவணங்கள் அனுராதபுரம் அலுவலகத்திலேயே இருந்ததாகவும், இரண்டு வருடங்களுக்கு முன்னரே அவை யாழ். அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பில் காணி மற்றும் காணி விவகார அமைச்சர் S.M. சந்திரசேனவிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. யாழ். அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்படவில்லையென அமைச்சர் குறிப்பிட்டார். எனினும், அனுராதபுரம் அலுவலகத்தில் உத்தியோகத்தர்கள் அதிகம் இருப்பதனால், மக்களுக்கான சேவைகளை துரிதப்படுத்துவற்காக இந்த முயற்சி எடுக்கப்படுகின்ற போதிலும், வட மாகாண மக்களை சிரமப்படுத்த தாம் விரும்பவில்லையெனவும் அமைச்சர் தெரிவித்தார். எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் தான் தொடர்ந்தும் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக காணி அமைச்சர் உறுதியளித்தார்.

ஏனைய செய்திகள்