கொரோனா தொற்றினால் இதுவரை 525 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்றினால் இதுவரை 525 பேர் உயிரிழப்பு

by Staff Writer 13-03-2021 | 3:42 PM
Colombo (News 1st) நாட்டில் 5 கொரோனா மரணங்கள் நேற்று (12) உறுதி செய்யப்பட்டுள்ளன. இரண்டு பெண்களும் மூன்று ஆண்களுமே உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று, வத்தளை, மொரட்டுவை, ராகம மற்றும் பொல்கஸ்ஓவிட்ட ஆகிய பகுதிகளை சேர்ந்த 72, 75, 63, 73 வயதுகளான 5 பேரே கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அதற்கமைய, கொரோனா தொற்றினால் நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 525 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 291 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டனர். நாட்டில் இதுவரை 87,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 83,958 பேர் குணமடைந்துள்ளனர். 2,803 கொரோனா நோயாளர்கள் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர். இதேவேளை, கொரோனா தடுப்பிற்காக ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் தடுப்பூசியை இறக்குமதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் COVAX திட்டத்தின் கீழ் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளதுடன், இந்தியாவின் Serum நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் Covishield தடுப்பூசியை இறக்குமதி செய்வதற்கான முற்பதிவும் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இலங்கையில் அவசர பயன்பாட்டிற்காக Covishield மற்றும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் (Sputnik V) தடுப்பூசிகளை பயன்படுத்த அரச ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது. இதேவேளை, COVAX திட்டத்தினூடாக கிடைத்துள்ள தடுப்பூசிகளை முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு ஏற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டார். முதியோர் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள முதியவர்கள், அங்கு பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்படும் என அவர் கூறினார். கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் நேற்று முதல் இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். இதேவேளை, கொரோனா தடுப்பூசி ஏற்றியோருக்கான இரண்டாவது தடுப்பூசி ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதிக்கு பின்னர் ஏற்றப்படும் என அவர் குறிப்பிட்டார். இதுவரை நாடளாவிய ரீதியில் 7,50,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கையில் ஏற்றப்படும் Covishield தடுப்பூசியின் செயற்பாடு தொடர்பில் தற்போது ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர், டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். Covishield தடுப்பூசி ஏற்றப்படுவதால் கொரோனா தடுப்பில் சிறந்த முன்னேற்றம் காணப்படுவதாக அவர் கூறினார். இதனால் எவ்வித அச்சமும் இன்றி தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளுமாறும் டொக்டர் சந்திம ஜீவந்தர பொது மக்களிடம் கோரிக்கை விடுத்தார். தடுப்பூசி ஏற்றப்பட்டதன் பின்னர் ஆண்மை குறைப்பாடு ஏற்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு பொய்யானது எனவும் அவ்வாறான சம்பவங்கள் எங்கும் பதிவாகவில்லை எனவும் டொக்டர் சந்திம ஜீவந்தர உறுதியாகக் கூறினார். இதேவேளை, மேல் மாகாணத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (15) மூன்று தரங்களுக்கான பாடசாலை கற்பித்தல் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் தரம் 05, 11 மற்றும் உயர் தர மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன.

ஏனைய செய்திகள்