by Bella Dalima 12-03-2021 | 3:18 PM
Colombo (News 1st) Astrazeneca நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசியை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு இரத்தம் உறையும் தன்மை ஏற்படுவதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டதையடுத்து, டென்மார்க்கில் அதனை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகில் 200-க்கும் அதிகமான நாடுகள் கொரோனாவால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குணமடைந்து வீடு திரும்புகிறார்கள். என்றாலும், புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஏராளமான தடுப்பு மருந்துகள் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதில் ஒரு சில மருந்துகளை செலுத்திக்கொள்வதால் பக்கவிளைவு ஏற்படுவது தெரியவந்தது.
பொதுவாக தடுப்பு மருந்துகளை பயன்படுத்தினால் காய்ச்சல், தலைவலி, உடல் வலி, சோர்வு, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படலாம். இவை வழக்கமானது.
ஆனால், Astrazeneca நிறுவனம் தயாரிக்கும் மருந்தை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு இரத்தம் உறையும் தன்மை ஏற்படுவதாக முறையிடப்பட்டது.
ஆஸ்திரியா நாட்டில் 42 வயதான தாதி ஒருவருக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டது. இதனால் அவருக்கு இரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்பட்டு அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, அந்த மருந்து பயன்பாட்டை ஆஸ்திரியா நிறுத்திக் கொண்டது. இது தவிர எஸ்டானியா, லட்வியா, லித்வானியா, லக்சம்பர்க் ஆகிய நாடுகளும் அஸ்ட்ரா ஜெனிக்கா தடுப்பு மருந்தை பயன்படுத்துவதை நிறுத்திக் கொண்டன.