தென்னாபிரிக்காவில் பரவும் புதிய வகை COVID-19 வைரஸ் இலங்கையில் கண்டுபிடிப்பு

by Staff Writer 12-03-2021 | 6:13 PM
Colombo (News 1st) தென்னாபிரிக்காவில் பரவும் புதிய வகை COVID-19 வைரஸ் (B.1.351) தொற்றுக்குள்ளான ஒருவர் முதல் தடவையாக இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர், டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார். தான்சானியாவிலிருந்து வருகை தந்து, தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஒருவரே புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அவர் கூறினார். குறித்த நபர் தொடர்பான மேலதிக தரவுகள் சுகாதார அமைச்சிடம் காணப்படுவதாகவும் டொக்டர் சந்திம ஜீவந்தர குறிப்பிட்டார். இதேவேளை, கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட பகுதிகள், அவிசாவளை, குருவிட்ட, பியகம, மாத்தளை, ரத்தோட்டை, களுத்துறை மற்றும் மஹியங்கனை ஆகிய பகுதிகளில் 93 பேரிடம் கடந்த மாதம் மாதிரிகள் பெறப்பட்டதாகவும் மஹியங்கனை பகுதியில் பெறப்பட்ட மாதிரியில் அபாயமான வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் கூறினார். மாதிரிகளூடாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பில் மேலதிக ஆய்வுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர், டொக்டர் சந்திம ஜீவந்தர சுட்டிக்காட்டினார்.