சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஆரம்பம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஆரம்பம்

by Bella Dalima 12-03-2021 | 5:48 PM
Colombo (News 1st) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று ஆரம்பமானது. தமிழ்நாட்டின் 16 ஆவது சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுக்களை இன்றிலிருந்து எதிர்வரும் 19 ஆம் திகதி வரை தாக்கல் செய்ய முடியுமென அறிவிக்கப்பட்டிருந்தது. தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இம்மாதம் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது. பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான திகதியினை இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா அறிவித்திருந்தார். ஏப்ரல் 6 ஆம் திகதி சட்டமன்றத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவதாகவும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலையும் அதே நாளிலேயே நடத்துவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா தொற்று காரணமாக வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கை 88,936 ஆக அதிகரிக்கப்படவுள்ளது. அத்துடன், வழமையை விட ஒரு மணித்தியாலம் கூடுதலாக வாக்களிப்பதற்கு வழங்கப்படுமெனவும் இந்திய தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். வாக்கெண்ணல் நடவடிக்கைகள் மே மாதம் 2 ஆம் திகதி நடைபெறவுள்ளன. தற்போதைய 15 ஆவது சட்டமன்றத்தின் பதவிக்காலம் மே மாதம் 24 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கட்சிகள் சிலவற்றின் வேட்பாளர் பட்டியல் வௌியிடப்பட்டுள்ளன. கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு நிறைவடைந்த நிலையில், திராவிட முன்னேற்றக் கழகம் 173 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. மு.க. ஸ்டாலின் கொளத்தூரிலும் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கத்திலும் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் சிலர் இன்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்ததாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கட்சிகள் சிலவற்றின் தொகுதிப் பங்கீடு இன்னமும் நிறைவடையவில்லையெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.