காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு பணிப்பாளரின் உத்தரவின் பேரிலேயே ஆவணங்கள் இடமாற்றப்பட்டதாக தகவல்

by Staff Writer 12-03-2021 | 8:28 PM
Colombo (News 1st) காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு பணிப்பாளரின் உத்தரவின் பேரிலேயே யாழ். காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களின் ஒரு தொகுதியை அனுராதபுரத்திற்கு கொண்டு சென்றதாக ஆணைக்குழுவின் வடக்கு வலய பணிப்பாளர் நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார். யாழ்ப்பாணம் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களின் ஒரு தொகுதி அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் வடக்கு வலய பணிப்பாளர் தி.விமலன் தெரிவித்தார். வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களினதும் ஆவணங்கள் இந்த அலுவலகத்தில் இருந்ததாகவும், அதில் யாழ். மாவட்டத்திற்குரிய ஆவணங்களைத் தவிர ஏனைய மாவட்டங்களின் ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு பணிப்பாளரின் கடிதத்தின் பிரகாரம், ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் வடக்கு வலய பணிப்பாளர் குறிப்பிட்டார். இதனிடையே வட மாகாணத்தில் அண்மையில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட போது காணி தொடர்பான ஆவணங்கள் கொண்டு செல்லப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லையெனவும் பகல் வேளையிலே அந்த ஆவணங்கள் கொண்டு செல்லப்பட்டதாகவும் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் வடக்கு வலய பணிப்பாளர் ​தெரிவித்தார்.