கடந்த 24 மணித்தியாலங்களில் காட்டு யானை தாக்கி மூவர் பலி

கடந்த 24 மணித்தியாலங்களில் காட்டு யானை தாக்கி மூவர் பலி

எழுத்தாளர் Staff Writer

12 Mar, 2021 | 8:11 pm

Colombo (News 1st) கடந்த 24 மணித்தியாலங்களில் காட்டு யானை தாக்கியதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

புத்தளத்தில் பல கிராமங்களை சேர்ந்த மக்கள் சுமார் 30 வருடங்களாக காட்டு யானை பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர்.

இன்று அதிகாலை நகருக்கு சென்று கொண்டிருக்கும் போது கல்லடி பிரதேசத்தில் 55 வயதான ஒருவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தின் பின்னர் மக்கள் வீதியில் இறங்கி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றாலும் நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியவில்லை.

இதனால் புத்தளம் – குருநாகல் வீதியூடான போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் வௌிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் பிரியங்க ஜயரத்ன அவ்விடத்திற்கு சென்றிருந்தார்.

புத்தளம் மாவட்ட வனஜீவராசிகள் உதவி பணிப்பாளரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தார்.

யானைகளை விரட்டும் செயற்பாடு இன்று முன்னெடுக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில், கெப்பத்திகொல்லாவ பிரதேசத்தில் யானை தாக்கி 61 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தமது விளைநிலத்திற்கு சென்றிருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தமது பிரச்சினை தொடர்பில் எவரும் கவனத்திற்கொள்வதில்லையென மக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, மன்னார் – தேத்தாவாடி பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான 69 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று முற்பகல் 11 மணியளவில் யானையின் தாக்குதலுக்கு குறித்த நபர் இலக்கானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று பேருடன் மாடு மேய்க்க சென்றிருந்த ஒருவரே காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்