by Bella Dalima 12-03-2021 | 3:05 PM
Colombo (News 1st) உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
கொரோனா பாதிப்பினால் அமெரிக்காவில் இலட்சக்கணக்கானோர் தொழில்களை இழந்தனர்.
இதனிடையே அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த ஜனவரி 20 ஆம் திகதி பதவி ஏற்ற ஜோ பைடன், கொரோனாவால் சரிந்த பொருளாதாரத்தை மீட்க சிறப்பான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி, பொருளாதாரத்தை மீட்டெடுக்க 1.9 இலட்சம் கோடி அமெரிக்க டொலர் செலவில் கொரோனா நிவாரண நிதி திட்டத்தை ஜோ பைடன் கொண்டு வந்தார்.
இந்த கொரோனா நிவாரண நிதி சட்டமூலம் அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது. அதன் பின் பிரதிநிதிகள் சபையிலும் நிறைவேறியது.
இந்நிலையில், கொரோனா நிவாரண நிதி சட்டமூலத்தில் அதிபர் ஜோ பைடன் இன்று கையெழுத்திட்டார் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்தார்.
இந்த சட்டமூலத்தால் 85 சதவீத அமெரிக்க குடும்பங்கள் பயன்பெறும். இந்த மாதத்திற்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டொலர் வழங்கும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது.