சிவராத்திரி வாழ்த்துச் செய்திகள்

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவரின் சிவராத்திரி வாழ்த்துச் செய்திகள்

by Staff Writer 11-03-2021 | 7:49 AM
Colombo (News 1st) மகா சிவராத்திரியை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் தமது வாழ்த்துச் செய்திகளை வௌியிட்டுள்ளனர். அமைதி, நல்லிணக்கம், மகிழ்ச்சிக்கு சிவராத்திரி தினம் ஔியூட்டட்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார். பழங்காலத்திலிருந்தே இலங்கை வாழ் இந்துக்களின் இந்த அற்புதமான கலாசார விழா எமது சமூகத்திற்கு அளவிடற்கரிய பெறுமதியை சேர்த்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலின் காரணமாக, இந்து பக்தர்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி மகா சிவராத்திரி கிரியைகளில் ஈடுபட வேண்டியிருந்தது. அந்த கட்டுப்பாடுகளில் இம்முறை சிறிது தளர்வு இருந்தாலும், கடந்த வருடத்தை போன்றே இந்த வருடமும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி மகா சிவராத்திரி தினம் அனுஷ்டிக்கப்படும் என தாம் நம்புவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மகா சிவராத்திரி தின தீப ஔி, இந்து மக்களின் ஆன்மீகத்தை ஔியூட்டுவதை போன்று சமூகத்தில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை அடைந்து கொள்வதற்கும் சிவபெருமான் அருள் புரிய வேண்டும் என பிரார்த்திப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது வாழ்த்துச் செய்தியூடாக தெரிவித்துள்ளார். நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வினூடாக ஐக்கியத்திற்கான தேடலில் மேலும் பலம்பெற இறையருள் துணை புரியட்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார். மகா சிவராத்திரி விரதத்தினை அனுஷ்டிப்பதால் ஆன்மிக விமோசனம் கிடைக்கும் என்பது இந்துக்களின் உயர்வான நம்பிக்கையாகும். இந் நன்னாளில் இறையருளால் நிச்சயம் ஆன்மிக பலம் பெறுவார்கள் எனவும் பிரதமர் கூறியுள்ளார். மகா சிவராத்திரி தினத்தில் வளமானதொரு எதிர்காலத்திற்கான தமது எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேற இலங்கை வாழ் இந்துக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். அர்த்தம் பொருந்திய, மகிழ்ச்சிகரமான நன்னாளாக இந்த சிவராத்திரி தினம் அமைய வேண்டுமென பிரார்த்திப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதனிடையே மனிதனும் கடவுளும் ஒரே முனையில் சந்திக்கும் வரம் கொடுக்கும் சிவராத்திரி தினமாக இன்றைய தினம் அமையட்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்தியுள்ளார். மனிதர்களிடையே நல்லிணக்கத்திற்கும் சக வாழ்வுக்கும் வழிவகுக்கும் பக்தி நாள் என வர்ணிக்கக்கூடிய சிவராத்திரி தினம் மனித குலத்தின் அமைதியை குறிக்கின்றது. நம்பிக்கையின் ஔி, அனைத்திலும் பிரகாசிக்கட்டும் எனவும் அக மற்றும் புற இருளை விரட்டுவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் தனது சிவராத்திரி தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் அர்த்தமுள்ள நாளாக சிவராத்திரி அமையட்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்து தெரிவித்துள்ளார்.