யாழ். காணி மறுசீரமைப்பு அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு மாற்றம்

யாழ். காணி மறுசீரமைப்பு அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு மாற்றம்

எழுத்தாளர் Staff Writer

11 Mar, 2021 | 8:33 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணத்தில் உள்ள காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களின் ஒரு தொகுதி அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்திற்கான காணி சீர்திருத்தத்திற்கான பிராந்திய அலுவலகம் இதுவரை காலமும் யாழ் கச்சேரியிலிருந்து செயற்பட்டு வந்த நிலையில், தற்போது அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இந்த விடயத்தை ஒரு மாத காலத்திற்கு முன்னதாகவே தாம் வௌிக்கொணர்ந்ததாக சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், குறித்த அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் இரவோடு இரவாக, மின்சாரம் தடைப்பட்டிருந்த நேரத்தில் மாற்றப்பட்டுள்ளதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாணத்திற்கான அலுவலகத்தை வட மத்திய மாகாணத்திற்கு மாற்றுவது ஏற்புடையதல்ல எனவும் அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களின் ஒரு தொகுதி அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதை காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் வடக்கு வலய பணிப்பாளர் தி.விமலன் உறுதிப்படுத்தினார்.

வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களினதும் ஆவணங்கள் குறித்த அலுவலகத்தில் இருந்ததாகவும், அதில் யாழ். மாவட்டத்திற்குரிய ஆவணங்களைத் தவிர ஏனைய மாவட்டங்களின் ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அண்மையில் வட மாகாணத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட போது காணி தொடர்பான ஆவணங்கள் கொண்டு செல்லப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லையெனவும் பகல் வேளையிலேயே அந்த ஆவணங்கள் கொண்டு செல்லப்பட்டதாகவும் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் வடக்கு வலய பணிப்பாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்