இலங்கை படகிலிருந்தோருக்கு கடத்தலுடன் தொடர்பில்லை

கேரளாவில் கைப்பற்றப்பட்ட இலங்கை படகில் இருந்தவர்களுக்கு போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்பில்லை

by Staff Writer 10-03-2021 | 5:15 PM
Colombo (News 1st) 200 கிலோகிராம் ஹெரோயினுடன் இந்தியாவின் கேரள கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட இலங்கையின் மூன்று படகுகளில், இரண்டில் இருந்தவர்களுக்கு போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்பில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் கேரள கடற்பரப்பில் 200 கிலோகிராம் ஹெரோயின், 60 கிலோகிராம் ஹஷீஸ் போதைப்பொருட்களுடன் இலங்கையின் ஆகர்ஷா துவ, சத்துராணி -03, சத்துராணி -08 ஆகிய படகுகளை இந்திய கரையோர காவல் படையினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியிருந்தனர். எவ்வாறாயினும், சத்துராணி-03 மற்றும் சத்துராணி-08 ஆகிய படகுகளில் இருந்தவர்களுக்கு போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்பில்லை என்பது தெரியவந்ததையடுத்து, அவர்கள் இலங்கைக்கு திரும்ப அனுமதி வழங்கப்பட்டதாக த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது. இதற்கமைய, போதைப்பொருள் மற்றும் அனுமதி பெறாத தொலைத்தொடர்பு சாதனங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் ஆகர்ஷா துவ என்ற படகில் இருந்த ஆறு இலங்கையர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.