காங்கோவில் தங்கத் தாதுக்களாலான மலை

காங்கோவில் தங்கத் தாதுக்களாலான மலை: மண்வெட்டிகளுடன் விரைந்த மக்கள் (VIDEO)

by Bella Dalima 10-03-2021 | 3:31 PM
Colombo (News 1st) காங்கோவில் உள்ள மலையொன்றில் வெட்டியெடுக்கப்பட்ட மண்ணில் 60 முதல் 90 சதவீதம் வரையில் தங்கத்தாது இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் தெற்கு கிவு மாகாணத்தில் லுகிகி என்ற கிராமத்தில் உள்ள சிலர் மண்ணில் தங்கம் கலந்திருப்பதைக் கண்டறிந்துள்ளனர். அவர்கள் மூலம் இந்த விடயம் கிராமவாசிகள் மத்தியில் காட்டுத் தீ போல் பரவியது. இதனையடுத்து, கிராமவாசிகள் மண்வெட்டி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மலைக்கு சென்று மண்ணை வெட்டியெடுக்க ஆரம்பித்தனர். மண்ணை வீடுகளுக்கு எடுத்துச்செல்ல ஆரம்பித்தனர். பின்னர் அவற்றை தண்ணீரில் போட்டு அலசி தங்கத்தை பிரித்தெடுத்தனர். இது தொடர்பான வீடியோவை அகமது அல்கோபரி என்ற பத்திரிகையாளர் ட்விட்டரில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, அது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனிடையே, இந்த தகவல் அரசுக்கு தெரிந்தவுடன் மலையில் மண்ணை தோண்டுவதற்கு அதிகாரிகள் தடை விதித்தனர். இந்த மலை முழுவதிலும் தங்கத் தாது இருக்கலாம் என நம்பப்படுகிறது. எனவே, மலையை சுற்றிலும் பாதுகாப்பு படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.