எத்தனை நாட்கள் வேலை வழங்க முடியும் என்பதை தற்போது கூற முடியாது: பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்மேளனம்

by Staff Writer 10-03-2021 | 4:38 PM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1000 ரூபாவை வழங்குவதற்கான வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வௌியேறுவதற்கான அறிவித்தலை, தொழில் அமைச்சிற்கும், தொழிற்சங்கங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளதாக பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் செல்லுபடியாகும் வகையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1000 ரூபாவை வழங்குவதற்கான அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச நாளாந்த சம்பளமாக 900 ரூபாவும் வரவு செலவுத் திட்ட சலுகைக் கொடுப்பனவாக 100 ரூபாவும் வழங்கப்படவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பள அதிகரிப்பு தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாகக் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்கள் மாறுபட்ட நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளன. இன்று வௌியாகியுள்ள வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று, ஆகக் குறைந்த சம்பளத்தை வழங்க தாம் தயார் என பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேனம் அறிவித்துள்ளது. எனினும், தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஏனைய வசதிகள் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற வகையிலேயே தீரமானிக்கப்படும் என சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் இராஜதுரை தெரிவித்தார். தம்மால் செலவுகளை ஈடு செய்யக்கூடிய விதத்தில் தினமும் கொழுந்து பறிக்க வேண்டும் எனவும், வேலை நாட்களை தீர்மானிப்பதில் காலநிலை உள்ளிட்ட பல விடயங்கள் தாக்கும் செலுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். மாதத்தில் எத்தனை நாட்கள் வேலை வழங்குவது என்பதனை தற்போதைக்கு கூற முடியாது எனவும் பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை குறிப்பிட்டார். ஒரு மாதத்திற்கு முன்னர் முன்னறிவித்தல் கொடுத்து, 1992 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து தமது தரப்பினரால் வௌியேற முடியும் எனவும் பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்தது. கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வௌியேறுவதற்கான அறிவித்தலை தொழில் அமைச்சிற்கும், தொழிற்சங்கங்களுக்கும் ஏற்கனவே தாம் அனுப்பிவிட்டதாகவும் ரொஷான் இராஜதுரை மேலும் கூறினார்.