by Staff Writer 10-03-2021 | 4:15 PM
Colombo (News 1st) ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்ற விடயத்தை உள்ளடக்குவதற்கு உதவுமாறு கோரி இந்தியாவிடம் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் மேன்முறையீடு செய்துள்ளது.
பிரித்தானியா தலைமையிலான நாடுகளால் தன்னிச்சையாக வரையப்பட்ட “பூச்சிய வரைவு” தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்க முன்னர் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்ட இணைந்த மேன்முறையீடுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அந்த இயக்கம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஓர் உறுப்பினராக இந்தியா இருப்பதால், “பூச்சிய வரைவு” தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டியமையை உள்ளடக்குவதற்கு பரிந்துரை செய்வதற்கான சகல உரிமைகளையும் இந்திய பிரதமர் கொண்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.